மராட்டியத்தில் 12 முதல் 14 வயது வரையிலான 39 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி

மராட்டியத்தில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணியும் தொடங்கி உள்ளது.

Update: 2022-03-17 00:47 GMT
மும்பை,

கொரோனா வைரசுக்கு எதிரான வலிமையான பேராயுதம், தடுப்பூசி. அதனால்தான் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கி பல கட்டங்களாக விரிவுபடுத்தி வருகிறது.

நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அறிவிக்கப்பட்டபடி நேற்று தொடங்கியது. 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் மூலம் தயாரிக்கப்படுகிற கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 28 நாள் இடைவெளியில் இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த வயது பிரிவினர் 4.7 கோடி பேர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மராட்டியத்திலும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 39 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி போடுவதை மாநில அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 சிறப்பு மையங்களை அமைக்க மாவட்ட நிர்வாகத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவு படி 28 நாட்கள் இடைவெளிவிட்டு குழந்தைகளுக்கு 2-வது டோஸ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வயது பிரிவினர், கோ-வின் தளத்திலோ அல்லது தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களிலோ பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் நேற்று தொடங்கியது. இவர்களை பொறுத்தமட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த ஒன்றை முதல் 2 டோஸ்களாக செலுத்தினார்களோ, அதையே இப்போது முன் எச்சரிக்கை டோசாகவும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடுவதும் தொடங்கி உள்ளது. நாம் ஒன்று சேர்ந்து, நாட்டை பாதுகாப்போம், தடுப்பூசி போடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

12 முதல் 14 வயது வரையிலான சிறுவர் சிறுமியர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

நமது குடிமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இன்று ஒரு முக்கிய நாள். இப்போது முதல் 12 முதல் 14 வயது வரையிலானவர்கள் தடுப்பூசிக்கு தகுதி உடையவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிக்கு தகுதி உடையவர்கள். இந்த வயது பிரிவினர்களை தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

15 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு 9 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 180 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிராக நமது மக்களுக்கு முக்கியமான பாதுகாப்பு கவசமாக இது அமைகிறது.

இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள், கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலிமை ஆக்கி உள்ளன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்