'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் 'உண்மையின் தைரியமான பிரதிநிதித்துவம்' - உள்துறை மந்திரி அமித்ஷா
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் 'உண்மையின் தைரியமான பிரதிநிதித்துவம்' என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'.
80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக்களமாக கொண்டு தயாராகியிருந்த இந்த திரைப்படம் கடந்த 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் நாடு முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது.
இந்த நிலையிங் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படக்குழுவினரை இன்று சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 'உண்மையின் தைரியமான பிரதிநிதித்துவம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இன்று தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் குழுவை சந்தித்தேன். சொந்த நாட்டிலேயே வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்ட காஷ்மீரி பண்டிட்களின் தியாகம், தாங்க முடியாத வலி, போராட்டம் ஆகியவற்றின் உண்மை இத்திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது, இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உண்மையின் தைரியமான பிரதிநிதித்துவம். இது போன்ற வரலாற்றுத் தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும். இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக ஒட்டுமொத்த குழுவையும் வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார்.