உக்ரைனில் இருந்து 22 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
உக்ரைனில் இருந்து 22 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாநிலங்களவையில் பேசியதாவது:-
உக்ரைனில் சிக்கியிருந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்தனர். கடும் சவால்களுக்கு இடையே உக்ரைனில் இருந்து ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் 22,500 இந்தியர்கள் பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். உக்ரைனில் இருந்த இந்தியர்களை மீட்பதும், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதும் சவாலாக இருந்தது.
உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க அந்நாட்டில் பிரத்யேக ரெயில்கள் இயக்கப்பட்டன. மாணவர்களை மீட்பதற்கு பல தன்னார்வர்களும் உதவி செய்தனர். உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்களை அண்டை நாடுகள் மிகுந்த மதிப்புடன் நடத்தின.
போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை மீட்பது சாத்தியமானது. இந்தியர்கள் மட்டுமன்றி, பிற வெளிநாட்டினரையும் உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம். என்று கூறினார்.