மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் 21-ந் தேதி நாடுதழுவிய போராட்டம்
விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா நீக்கப்படுவார் ஆகிய வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அப்போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு மசோதா கொண்டு வருவது பற்றி ஆராய குழு அமைக்கப்படும், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா நீக்கப்படுவார் ஆகிய வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது. அதன் பேரில், போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். இந்த நிலையில், 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், மத்திய அரசின் வாக்குறுதிகள் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று விவசாய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து, 21-ந் தேதி நாடு முழுவதும் மாவட்ட, வட்ட அளவில் போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், ஏப்ரல் 11-ந் தேதி முதல் 17-ந் தேதிவரை, குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத வாரம் அனுசரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.