கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஹிஜாப்’ வழக்கில் இன்று தீர்ப்பு

கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-03-14 18:56 GMT
பெங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வகுப்புக்கு வந்தனர்.

மத அடையாள ஆடைகள்

இதுதொடர்ந்து நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த கல்லூரியின் முதல்வர் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து உத்தரவிட்டார். இதை கண்டித்து அந்த முஸ்லிம் மாணவிகள் அதே கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சர்வதேச அளவிலும் விவாதிக்கப்பட்டது.

பதிலுக்கு இந்து மாணவ-மாணவிகளும் காவி துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் உடுப்பி மட்டுமின்றி சிவமொக்கா, பல்லாரி, மண்டியா, விஜயாப்புரா, பெலகாவி, துமகூரு, சிக்கமகளூரு என்று மாநிலம் முழுவதும் பரவியது. கடந்த மாதம் 8-ந் தேதி சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தை தணிக்க பள்ளி-கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து உத்தரவிட்டது.

மனுக்கள் தாக்கல்

இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 18 பேர், ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். முதலில் இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், இதில் அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறி, இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு, அதன் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி விசாரணை தொடங்கியது. முதல் நாளிேலயே இடைக்கால உத்தரவு பிறப்பித்த அந்த அமர்வு, மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புகளுக்கு வர தடை விதித்தது.

இன்று தீர்ப்பு

அதைத்தொடர்ந்து 11 நாட்கள் விசாரணை நடைபெற்றது. ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கூடாது என்று கர்நாடக அரசு வாதத்தை எடுத்து வைத்தது. ஹிஜாப் அணிந்து வருவது மத சுதந்திரம் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது. அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி, மனுதாரர்கள் சார்பில் தேவதத் காமத், ரவிவர்மகுமார் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நிறைவடைந்தது. அன்றைய தினம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த தீர்ப்புக்கு பிறகு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்க தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் ஒரு வாரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்