பஞ்சாபில் சர்வதேச கபடி வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை
சர்வதேச கபடி வீரர் சந்தீப் நங்கல், மர்மகும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில், கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த மர்மகும்பல் திடீரென சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கல் சாம்பியனை, தலை மற்றும் மார்பு பகுதியில் சரமாறியாக சுட்டுக் கொலை செய்தனர். சுமார் 20 குண்டுகள் அவரது உடம்பில் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்ற அபாரமாக விளையாடி வருகிறார் சந்தீப் நங்கல். சமீபகாலமாக கபடிப் போட்டிகளில் அதிகளவிலான வெற்றிகளின் மூலம் புகழ் அடைந்து வந்தார். கபடி போட்டியில் தனது திறமையால் சாதித்து வந்த நிலையில், கபடி கூட்டமைப்பை ஒன்றையும் நிர்வகித்து வந்தார் சந்தீப் நங்கல்.
இந்நிலையில், கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் கூட்டமைப்புடன் சந்தீப் நங்கலுக்கு இருந்த பிரச்சினை காரணமாக இன்று மாலை 6 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு தகவல் போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. சந்தீப் நங்கலின் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.