பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் தலைவர் சசி தரூர்!!

பிரதமர் மோடி அளப்பரிய ஆற்றலும் சுறுசுறுப்பும் கொண்டவர் என்று சசிதரூர் பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2022-03-14 05:07 GMT
ஜெய்ப்பூர்,

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு சசிதரூர் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும்  இலக்கிய விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூதத தலைவர்களில் ஒருவரான சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி அளப்பரிய வீரியமும் சுறுசுறுப்பும் கொண்டவர். அவர் அரசியல் ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய சில விஷயங்களைச் செய்துள்ளார். அவர் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஒரு நாள், இந்திய வாக்காளர் பெருமக்கள் பாரதிய ஜனதாவை (பாஜக) ஆச்சரியப்படுத்துவார்கள். ஆனால் இன்று மக்கள் அவர்களுக்கு (பாஜக) அவர்கள் விரும்பியதை வழங்கியுள்ளனர்.

பிரதமர் மோடி இனவாத மற்றும் மத அடிப்படையில் நமது நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை சமூகத்தில் கட்டவிழ்த்துவிட்டார். இது என்னைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமான ஒன்று.

உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. அங்கு சமாஜ்வாதி கட்சி அதிகமான இடங்களை வென்று பலமான எதிர்க்கட்சியாகி உள்ளது.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சிக்காக ஆற்றல்மிக்க பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஒரு தனி நபரின் பிரச்சாரத்தை வைத்து காங்கிரசை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அவர் மாநிலம் முழுக்க குறிப்பிடத்தக்க வகையில் பிரச்சாரம் செய்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக, சில மாநிலங்களில்  காங்கிரஸ் கட்சியின் நிலை கீழே சென்று கொண்டிருக்கிறது. கட்சிக்கு பிரச்சினைகள் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்