காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது; ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க கோரிக்கை எனத் தகவல்

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் அதிகாரமிக்க செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

Update: 2022-03-13 10:46 GMT
புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாததுடன், தன் வசம் வைத்திருந்த பஞ்சாப்பையும் இழந்து விட்டது.

இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக கட்சியின் அமைப்பு மற்றும் தலைமையில் மாற்றம் கொண்டு வருமாறு ஏற்கனவே போர்க்கொடி தூக்கி வரும் ‘ஜி-23’ குழுவை சேர்ந்த மூத்த தலைவர்கள், மீண்டும் ஒருமுறை கட்சித்தலைமையை நோக்கி விமர்சனங்களை வைத்துள்ளனர். தேர்தல் தோல்வியை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்த குழுவை சேர்ந்த பல தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து அதிர்ச்சி வெளியிட்ட அவர்கள், காங்கிரசை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். இந்த குழுவை சேர்ந்தவரும், எம்.பி.யுமான சசிதரூர், இந்த தோல்வி குறித்து கூறுகையில், நாம் வெற்றிபெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியில் மாற்றம் தவிர்க்க இயலாதது எனக்கூறியுள்ளார்.

இவ்வாறு தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில் கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான காரியக்கமிட்டி கூட்டம் இன்று தொடங்கியது.

இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சோனியா தலைமை தாங்கி வருகிறார்.  இந்த கூட்டத்தில் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.   கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கட்சி அடைந்துள்ள மோசமான தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் கூட்டத்தில் முன் வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்