கோவாவில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களில் 40 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்
கோவாவில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களில் 40 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் பற்றிய விவரத்தை ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.;
கோவாவில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், வெற்றி பெற்றுள்ள புதிய எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரத்தை ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, மொத்தமுள்ள 40 எம்.எல்.ஏ.க்களில் 40 சதவீதம் பேர், அதாவது 16 பேர் குற்ற வழக்கு பின்னணி உடையவர்கள். அதில் 13 பேர் மீதான குற்ற வழக்குகள் தீவிரமானவை. 2 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு உள்ளது. ஒருவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் இருக்கிறது.
பா.ஜ.க. சார்பில் வென்றுள்ள 20 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் மீதும், காங்கிரசின் 11 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் மீதும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் மீதும், கோவா முற்போக்கு கட்சியின் ஒரே எம்.எல்.ஏ. மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
98 சதவீத எம்.எல்.ஏ.க்கள், அதாவது புரட்சிகர கோவா கட்சி எம்.எல்.ஏ. ஒருவரைத் தவிர மற்ற 39 பேரும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.
எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.20 கோடியாக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் வென்ற குற்றப் பின்னணி உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, சொத்து மதிப்பு இரண்டுமே அதிகரித்திருக்கின்றன. 2017 தேர்தலில் வென்ற 23 சதவீத எம்.எல்.ஏ.க்கள் அதாவது 9 பேர் குற்றப் பின்னணி உடையவர்களாக இருந்தார்கள். அப்போது எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.10.90 கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.