உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரசின் 148 பெண் வேட்பாளர்களில் ஒரே ஒருவர் வெற்றி

உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரசின் 148 பெண் வேட்பாளர்களில் ஆராதனா மிஸ்ரா மோனா மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்.

Update: 2022-03-12 19:17 GMT
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல், பழம் பெரும் கட்சியான காங்கிரசுக்கு சோகத்தையே தந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக அக்கட்சியின் பெண் வேட்பாளர்கள் 148 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

மாநிலத்தில் தேர்தல் பொறுப்பு ஏற்றிருந்த பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 40 சதவீதம் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன்படி 148 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் கட்சியின் சட்டசபை தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் நட்சத்திர பெண் வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினர். அவர்களில் பெரும்பாலானோர், 3 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்று ‘டெபாசிட்’டை பறிகொடுத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, எல்லா கட்சியின் அனைத்து வேட்பாளர்களில் 49 பேர், 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர்.

சமாஜ்வாடி கட்சியின் 25 வேட்பாளர்களும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரீய லோக் தள கட்சியின் 3 வேட்பாளர்களும் 5 ஆயிரத்துக்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கின்றனர். அதேபோல பா.ஜ.க.வின் 18 வேட்பாளர்களும் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்திருக்கின்றனர். அதன் கூட்டணிக் கட்சிகளான நிஷாத் கட்சி 2 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) ஒரு இடத்திலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கின்றன.

மேலும் செய்திகள்