காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல், பிரியங்கா காந்தி விலக முடிவா?

பரபரப்பான சூழலில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நாளை கூடுகிறது

Update: 2022-03-12 14:05 GMT
File Photo: PTI
புதுடெல்லி,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.  குறிப்பாக ஆட்சியில் இருந்த பஞ்சாபிலும் ஆட்சியை பறிகொடுத்தது. படு தோல்வியை சந்தித்ததோடு, அக்கட்சியின் வாக்கு சதவிகிதமும் குறைந்து இருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது. நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் 5 மாநில தேர்தலில் தோல்வி ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, தொடர் தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில், காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முன்வரலாம் என்று பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய முன்வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இதுபோன்று காந்தி குடும்பத்தினர் ராஜினாமா செய்ய முன் வரும் போது, காங்கிரஸ் காரிய கமிட்டி நிர்வாகிகள் அதை நிராகரிப்பதோடு, சோனியா காந்தி ,ராகுல் காந்திக்கு தங்களின் முழு ஆதரவை அளிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை கட்சியில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று சில காரிய கமிட்டி உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்