உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல்; பைனாகுலர் மூலம் வாக்குப்பெட்டியை கண்காணித்த வேட்பாளர் தோல்வி..!

வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற வாய்ப்புள்ளதாக கருதி, எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்கு சமாஜ்வாடி கட்சி ஆட்களை நியமித்திருந்தது.;

Update: 2022-03-11 11:54 GMT
லக்னோ,

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அகிலேஷ் யாதவ் தலைவமையிலான கூட்டணி 120 இடங்களுக்கு மேல் பிடித்தது.

வாக்கு எண்ணப்படுவதற்கு முன்பு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற வாய்ப்புள்ளதாக கருதி, எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிக்கு  சமாஜ்வாடி கட்சி ஆட்களை நியமித்திருந்தது.

மீரட் மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதி வேட்பாளர் யோகேஷ் வர்மா, பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் பைனாகுலர் மூலம் பார்வையிட்ட சமாஜ்வாடி வேட்பாளரான யோகேஷ் வர்மா சுமார் 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டுள்ளார்.

யோகேஷ் வார்மா சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் காதிக் 1.07 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். யோகேஷ் வர்மா 7312 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் 43.55 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர் 46.72 வாக்குகள் பெற்றார்.

மேலும் செய்திகள்