நாடாளுமன்ற தேர்தலின் விதியை மாநில தேர்தல்கள் முடிவு செய்வதில்லை; பிரசாந்த் கிஷோர்
நாடாளுமன்ற தேர்தலின் விதியை மாநில தேர்தல்கள் முடிவு செய்வதில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இவற்றின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. தேர்தல்களில் பெற்ற வெற்றியை அடுத்து அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெற்றியை முன்னிட்டு குஜராத்தின் ஆமதாபாத் நகரில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி சாலையில் கூட்டத்தினரை நோக்கி வெற்றி சின்னம் காட்டியபடி இன்று சென்றார். கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய் என கோஷங்களை எழுப்பினர். சாலையின் ஓரத்தில் காவி கொடியும், காவி நிறத்தில் பலூன்களும் பறக்க விடப்பட்டு இருந்தன. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் பேரணியாக சென்றுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், நாடாளுமன்ற தேர்தலின் விதியை மாநில தேர்தல்கள் முடிவு செய்வதில்லை என தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மாநில தேர்தல்களில் பெற்ற வெற்றி அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. மத்திய அரசு அதிகாரத்திற்கான உண்மையான போட்டி வருகிற 2024ம் ஆண்டு நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல்களில் பெற்ற வெற்றியால் உளவியல் ரீதியாக எதிர்க்கட்சிகளை ஊக்கமிழக்க செய்யும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.