கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை - ஓவைசி வருத்தம்
சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை எனத் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளியாகின. இவற்றில் பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக முன்னணியில் உள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:-
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. உத்தரப்பிரதேச மக்கள் பாஜகவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சி கலைக்கப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக இருக்கும். இந்திய ஜனநாயகத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கட்சி வலுவடையும் என நம்புகிறோம்.
இன்றைய முடிவு நிச்சயமாக பலவீனத்தைக் காட்டுகிறது, ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தேவை.
இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி என்றார்.