மக்களின் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் - கேப்டன் அமரீந்தர் சிங்
மக்களின் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி முதல் இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்(பிஎல்சி கட்சி) பின்னடைவை சந்தித்து வந்தார். பஞ்சாப் தேர்தலில், பாஜக தனது நீண்டகால கூட்டாளியான எஸ்ஏடி(சிரோன்மணி அகாலிதளம்) கட்சியை விட்டு பிரிந்து, காங்கிரசை விட்டு பிரிந்த முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியான பிஎல்சி(பஞ்சாப் லோக் காங்கிரஸ்) மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் களம் கண்ட அமரீந்தர் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் அடைந்த இந்த படுதோல்வி அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரை போலவே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் தோல்வி குறித்து முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் வெளிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“மக்களின் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். பஞ்சாபியர்கள் மதவெறி மற்றும் சாதிக் கோடுகளுக்கு அப்பால் உயர்ந்து வாக்களிப்பதன் மூலம் பஞ்சாபியத்தின் உண்மையான உணர்வைக் காட்டியுள்ளனர். பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பகவந்த் மான்க்கு வாழ்த்துக்கள் ” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.