கோவா தேர்தல்: மனோகர் பாரிக்கர் மகன் - பாஜக வேட்பாளர் இடையே கடும் போட்டி

கோவா சட்டசபை தேர்தலில் மனோகர் பாரிக்கர் மகன் உத்பால் பாரிக்கர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

Update: 2022-03-10 05:22 GMT
பனாஜி,

40 தொகுதிகளுக்கான கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில், முன்னிலை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜகவும், 12 தொகுதிகளில் காங்கிரசும், 5 தொகுதிகளில் மகாராஷிடிரவாடி கோமண்டக் கட்சியும், 3 தொகுதிகளில் சுயேட்சைகளும், 1 தொகுயில் ஆம் ஆத்மியும் முன்னிலையில் உள்ளன.

இதற்கிடையில், கோவா முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

பனாஜி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உத்பால் வாய்ப்பு கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பாஜக வேட்பாளராக அட்டன்சியொ மான்செரெட் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து உத்பால் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

இந்நிலையில், பனாஜி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளருக்கு சுயேட்சையாக போட்டியிடும் உத்பால் பாரிக்கருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 4 ஆயிரத்து 397 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் அட்டன்சியொ முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளர் உத்பால் பாரிக்கர் 3 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

இந்த இருவருக்கும் அடுத்த படியாக 1,898 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் எல்விஸ் கோமீஸ் 3-வது இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளருக்கும் உத்பால் பாரிக்கருக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் மிகக்குறைவாக உள்ளதால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்