5 மாநில தேர்தல்; 1,600 வேட்பாளர்கள் குற்ற பின்னணி கொண்டவர்கள்
பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தலில் போட்டியிட்ட 6,900 வேட்பாளர்களில் 1,600 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அம்மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனால் வாரணாசியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடத்த வாய்ப்பில்லை என்று விளக்கினார். இந்த சம்பவம் குறித்தும் தெளிவுபடுத்தினார். அவர் அளித்த பேட்டியில், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படை தன்மையுடனேயே செயல்படுகிறது. வாரணாசியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வாரணாசி கூடுதல் தேர்தல் அதிகாரி உட்பட 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாரணாசியில் வெளியில் எடுத்து செல்லப்பட்டவை பயிற்சிக்காக கொண்டு வரப்பட்ட எந்திரங்களாகும். வாக்குப்பதிவின் போது, ஏதேனும் குளறுபடி ஏற்படும் பட்சத்தில் மாற்று எந்திரங்களாக உபயோகப்படுத்திட கூடுதலாக சில எந்திரங்கள் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அந்த எந்திரங்களே கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இதுகுறித்த முறையான தகவலை அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.
ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்திலும் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை கட்சிக்காரர்களிடம் காட்டி விளக்கிய பின்னர் அவர்கள் திருப்தியடைந்தனர் என கூறினார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், ஒமைக்ரான் அலையில் தேர்தல் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோது, விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமீறல் சம்பவங்களுடன் தொடர்புடைய 2,270 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திற்கு சமமே என கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள உங்கள் வேட்பாளரை அறியுங்கள் என்ற செயலியானது ஒரு நல்ல தொடக்கம். அது வெற்றி அடைந்து உள்ளது. குற்ற பின்னணி கொண்டவர்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்திருந்தது. அதனால், இந்த செயலியை நாங்கள் உருவாக்கினோம். 5 மாநில தேர்தலில் போட்டியிடும் மொத்தமுள்ள 6,900 வேட்பாளர்களில் 1,600 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை தலைமை தேர்தல் ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.