கோவா: காங்கிரசை தொடர்ந்து ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு..!
கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியும் தனது வேட்பாளர்களை பாதுகாப்பாக வைத்துள்ளது.
பனாஜி,
கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதற்கிடையில், 2022 சட்டமன்றத் தேர்தல்லிற்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 16 இடங்களை வெல்லும் . இழுபறி நிலைமை உருவாகலாம் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்தன. இதனிடையே இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெரும்பான்மை இல்லாத சூழலில் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதுபோலவே காங்கிரஸ் கட்சியும் அங்கு ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் ஆட்சி அமைக்க முடியாமல் போன 2017-ம் ஆண்டு போன்ற சூழலைத் தவிர்க்க காங்கிரஸ் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
இதன் ஒருபகுதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் அனைவரும் வடக்கு கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் தனது வேட்பாளர்களை பாதுகாப்பாக வெவ்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளது. ஆம் ஆத்மி பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும் கூட ஒரு சில எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றாலும் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க.வும், காங்கிரசும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதனால் தங்கள் வேட்பாளர்களை பாதுகாப்பாக வைக்கும் நடவடிக்கையை ஆம் ஆத்மி எடுத்துள்ளது.