5 மாநில சட்டசபை தேர்தல்: ‘விவிபேடுகளை’ சரிபார்க்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

வாக்குகளை எண்ணும் முன்பே ‘விவிபேடுகளை’ சரிபார்க்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்தது.

Update: 2022-03-09 00:47 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பே ‘விவிபேடுகளை’ சரிபார்க்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராகேஷ் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி, நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தற்போது முறையிடுகிறீர்களே என கேள்வி எழுப்பியதுடன், இந்த ரிட் மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளியுங்கள். மனுவை நாளை விசாரிக்கிறோம் என தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மணீந்தர் சிங், இந்த ரிட் மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், கடைசி கட்டத்தில் இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும் என கேட்டதுடன், இந்த விவாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி விவிபேடுகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்து இருப்பதால் இந்த ரிட் மனுவை விசாரிக்க முடியாது. 

வழக்கமான நாளில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம். ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையை கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்