2 சிறுமிகளை கடத்தி, பிச்சை எடுக்க வைக்க திட்டம்; துணிச்சலுடன் மீட்ட இ-ரிக்ஷா ஓட்டுனருக்கு கவுரவம்
கடத்தி, பிச்சை எடுக்க வைக்க திட்டமிடப்பட்டு இருந்த 2 சிறுமிகளை, சமயோசிதமுடன் செயல்பட்டு மீட்ட இ-ரிக்ஷா ஓட்டுனருக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.
பரூக்காபாத்,
உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் ஜில்மில் பகுதியில் வசித்து வருபவர் பிரம்மதத் ராஜ்புத். இ-ரிக்ஷா
ஓட்டுனர். கடந்த 5ந்தேதி விவேக் விகார் பகுதியில் பாலாஜி கோவில் அருகே பயணிகளுக்காக காத்திருந்து உள்ளார். இந்த நிலையில், அவரை நோக்கி ஒரு நபர் வந்துள்ளார். உடன் 7 மற்றும் 4 வயது கொண்ட இரு சிறுமிகளையும் அழைத்து வந்துள்ளார்.
அவர், தங்கள் 3 பேரையும் சிந்தாமணி சவுக் பகுதியில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். அந்த நபர் தன்னுடன் குப்பைகள் நிரம்பிய 2 பைகளையும் எடுத்து வந்துள்ளார். அந்த சிறுமிகள், தங்களுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு வீட்டில் விடுங்கள் என அந்நபரிடம் கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த பிரம்மதத், சிறுமிகளிடம் அந்த நபரை உங்களுக்கு இதற்கு முன் தெரியுமா? என கேட்டுள்ளார். அவர்கள், இல்லை என கூறியுள்ளனர். இதனால், எச்சரிக்கை அடைந்த பிரம்மதத் போக்குவரத்து அதிகாரி அருகே தனது இ-ரிக்ஷாவை நிறுத்தி, அந்த சூழ்நிலை பற்றி விளக்கியுள்ளார்.
இதன்பின் போலீசார், அந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்றார். சஞ்ஜய் என்ற அந்த நபர், போதைக்கு அடிமையானவர் என்பதும், சிறுமிகளை பிச்சை எடுக்க வைக்க திட்டமிட்டு கடத்தலில் ஈடுபட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதன்பின், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் பெற்றோரிடம் 2 சிறுமிகளும் ஒப்படைக்கப்பட்டனர். தெருக்களில் பிச்சை எடுக்க தள்ளப்பட இருந்த 2 சிறுமிகளை துணிச்சலுடனும், சமயோசிதமுடனும் பிரம்மதத் செயல்பட்டு காப்பாற்றி உள்ளார். அவரை, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி இன்று அழைத்து கவுரவித்து உள்ளார்.