இறுதிகட்ட தேர்தல்: உத்தரபிரதேசத்தில் 54 சதவீத வாக்குப்பதிவு..!
உத்தரபிரதேச மாநில இறுதிகட்ட தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 7-வது இறுதி கட்ட தேர்தல் நேற்று நடந்தது. 54 தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்பட 613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆளும் பா.ஜ.க. மந்திரிகள் பலர் இந்த தேர்தலில் களம் கண்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர்.
பிரதமர் நரேந்திரமோடியின் வாரணாசி எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் இந்த 54 இடங்களில் அடங்கும். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. வாரணாசி, அசம்கார், ஜான்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைதியாக தேர்தல் நடந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி 54.18 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வருகிற 10-ந்தேதி நடக்கிறது. தேர்தல் முடிவில் உத்தரபிரதேசத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும்.