உக்ரைனிலிருந்து அனைத்து மாணவர்களும் நாடு திரும்பும் வரை வெளியேற மாட்டேன்- இந்திய மருத்துவர்
இந்திய மருத்துவர் ஒருவர் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிலிருந்து அனைத்து மாணவர்களும் வெளியேறும் வரை நாட்டை விட்டு வெளியேற போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
கீவ்,
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.
இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் மத்திய அரசு அவர்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் மருத்துவரும், மாணவர் ஆலோசகருமான இந்திய மருத்துவர் டாக்டர் பிருத்வி ராஜ் கோஷ், இந்திய மாணவர்கள் நாடு திரும்பும் வரை அங்கே தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பிருத்வி ராஜ் கூறுகையில்,"நான் கீவில் தங்கியுள்ளேன். இதுவரை உக்ரைனில் இருந்து என்னிடம் பயின்ற சுமார் 350 மாணவர்களை வெளியேற்றியுள்ளேன். வெளியேறிய மற்ற மாணவர்கள் சுமியி மற்றும் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு உதவுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர்,” என கூறினார்.
அவரது தாயார் பிரதாட்டி கூறுகையில், தனது மகன் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்தார்.