கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி,
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 12-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கும் முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு குறைவாகவே இருந்தது. உக்ரைன்-ரஷியா போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது.
கடந்த 2-ந்தேதி கச்சா எண்ணெய் விலை 110 டாலர்களாக உயர்ந்தது. 3-ந் தேதி அது 118 டாலராக அதிகரித்தது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.19 டாலராக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை இந்த அளவு உச்சத்தை தொடுவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவலால் ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே ரஷியா உற்பத்தி செய்யும் எரிபொருளில் 66 சதவீதம் வாங்குவோர் இல்லாமல் தேங்கி கிடக்கும் நிலையில் மேற்கத்திய முறைப்படியான இறக்குமதி தடையை அறிவித்தால் சர்வதேச அளவில் எரிபொருள் சந்தையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அது பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவில் இருந்து எரிபொருள் வினியோகம் தொடர்ந்து தடைபடும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 185 டாலர்களை எட்டும் என்று ஜே.பி.மார்கன் நிறுவனம் கணித்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 139.13 டாலராக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலையை எவ்வளவு உயர்த்தலாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.