இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது,தெளிவான பதில் கிடைக்கவில்லை -துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று கூறினார்.
புதுடெல்லி
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.
அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை. ஆனால், அந்த மாணவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக போலந்தின் ரிசோ விமான நிலையத்தில் பேட்டியளித்த மத்திய மந்திரி வி.கே.சிங், கூறியதாவது:-
கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்க முடியாது. துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசியமோ தெரியாது. கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும்1700 மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” என கூறினார்.
ஏற்கெனவே கார்கிவில் உணவு வாங்கச் சென்ற போது ரஷிய குண்டுக்கு கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா இரையாகினார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மேலும் ஒரு இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோட், இந்தியா டுடே டிவியிடம், மூன்று நான்கு பேர் எங்களை நோக்கி சுட்டனர். இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
எனது தோளில் தோட்டா நுழைந்தது. அவர்கள் (மருத்துவர்கள் ) என் மார்பில் இருந்து ஒரு தோட்டாவை வெளியே எடுத்தனர்.என் கால் முறிந்தது. நான் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, என்னை லிவிவ் நகருக்கு அழைத்துச் செல்வதற்கான வசதியை வழங்க முடியுமா என்று கேட்டேன். என்னால் நடக்க முடியாது. நான் அதிகாரிகளுக்கு போன் செய்து கொண்டே இருந்தேன்.ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
இன்னும் பல இந்திய மாணவர்கள் கீவ்வில் சிக்கியுள்ளனர். தூதரகம் கீவ்வில் உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும். என்ன நடந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய ஒரே செய்தி. நல்லதை மட்டுமே நம்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காயமடைந்த இந்திய மாணவரை தொடர்பு கொண்ட இந்திய அதிகாரிகள் தற்போது பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.