போலந்தில் இருந்து 208 பேருடன் புறப்பட்ட 3-வது போர் விமானம் டெல்லி வந்தடைந்தது...!
போர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட மாணவர்களை பாதுகாப்புத் துறை இணை மந்திரி அஜய் பட் வரவேற்றார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியவுடன், உக்ரைன் தனது வான்பகுதியை மூடிவிட்டது. இதனால், அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
மாற்று திட்டமாக, உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றுக்கு இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து அவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
‘ஆபரேஷன் கங்கா’ என்ற இந்த மீட்பு பணியை மேற்பார்வையிட 4 மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார். மீட்பு பணியில் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 208 இந்தியர்களுடன் போலந்து நாட்டின் ரெஸ்ஸோவில் இருந்து புறப்பட்ட சி17 ரக போர் விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 3-வது போர் விமானம் டெல்லியில் தரையிறங்கியது.
அதில் பயணம் மேற்கொண்டவர்களை பாதுகாப்புத் துறை இணை மந்திரி அஜய் பட் மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக ஹங்கேரியில் இருந்து வந்த 2-வது போர் விமானத்தில் ஏற்கனவே 220 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.