உக்ரைன்: தாக்குதல் நடக்கும் பகுதிகளில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு பாதை - ரஷியா உறுதி
உக்ரைனில் தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாகச் செல்வதற்கான பாதுகாப்பான மனிதாபிமான பாதையை உருவாக்கப்பட்டு வருகிறது என ரஷியா கூறி உள்ளது.
புதுடெல்லி
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.
அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
இன்று 7வது நாளாக ரஷியா உக்ரைன் மீது ஆக்ரோஷ தாக்குதல் நடத்திவருகிறது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தாலும், மற்றொரு பக்கம் சண்டையும் உக்கிரம் அடைந்து வருவது சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
நேற்று நடந்தபோரில் கார்கிவ் நகரில் ரஷிய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் சேகர கவுடா என்பவர் பலியாகி இருப்பது, அங்கு தவித்து வருகிற இந்திய மாணவர்கள் மத்தில் தீராத சோகத்தையும், இந்தியாவில் உள்ள அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்திய மாணவர் நவீன் மரணம் விசாரிக்கப்படும் என இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
ரஷிய தரப்பில் உக்ரைனில் உள்ள கார்கிவ், சுமி மற்றும் பிற தாக்குதல் நடக்கும் மண்டலங்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ரஷியப் பகுதிக்கு பாதுகாப்பாகச் செல்வதற்கான மனிதாபிமான பாதையை உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு பிரச்சினையில் ரஷியா இந்தியாவுடன் தொடர்பில் உள்ளது. பாதுகாப்பான பாதை கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறினார்.