உக்ரைன் போர்: உணவு பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் நின்றபோது நவீன் கொல்லப்பட்டார்

கடையில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும்போது, ரஷிய வீரர்கள் ஏவிய ராக்கெட் குண்டு அந்த பகுதியில் விழுந்து வெடிக்க நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.;

Update: 2022-03-01 12:54 GMT
புதுடெல்லி,

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.

அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வரும் சப்தம் மட்டுமே கேட்கின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

உகரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் முழுமையாக ரஷியா கைப்பற்றவில்லை.

இந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டு மழையை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை வீசப்பட்டது.

அதே போல் கிவ் நகர் அருகே உள்ள எரிவாயு குழாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய் கிடங்கு முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் எரிவாயு குழாயில் இருந்து நச்சுபுகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றும் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் தொடர்ந்து சண்டைகள் நடந்தன.

இந்த நிலையில் ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ரஷியாவின் தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்தாக உக்ரைன் தெரிவித்து இருந்தது.

ஆனால் நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் இன்று காலை கார்கிவ் நகரில் ரஷிய ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர்  உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது. “இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறி உள்ளது.

தற்போது மாணவர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நவீன் சேகரப்பா கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கார்கீவ் தேசிய மெடிக்கல் யுனிவர்சிட்டியில் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். ரஷிய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் இந்திய மாணவர்கள் அண்டை மாநில எல்லைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே பதுங்கு குழியில் தங்களது உயிரை பிடித்துக் கொண்டு பயத்துடன் நடுங்கி இருக்கிறார்கள்.

கார்கீவ் நகரில் உள்ள கவர்னர் மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்திற்கு அடியில் இந்திய மாணவர் நவீன் உள்பட சிலர் பதுங்கியிருந்துள்ளனர்.

உணவு மற்றும் கைச்செலவுக்கு பணம் எடுக்க வெளியில் சென்றுள்ளார். மளிகை கடையில் பொருட்கள் வாங்க செல்வதாக அவனது அப்பாவிடம் நவீன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தந்தையிடம் போன் பேசிய இரண்டு மணி நேரத்திற்குள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கடையில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும்போது, ரஷிய வீரர்கள் ஏவிய ராக்கெட் குண்டு அந்த பகுதியில் விழுந்து வெடிக்க நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கார்கீவ் நகரில் உள்ள மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பூஜா பிரஹாராஜ் கூறுகையில் ‘‘நவீன் உணவு வாங்குவதற்கு வெளியில் சென்றார். மற்றவர்கள் ஓட்டலில் உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம். நவீன் பிளாட்டில் இருந்தார். அவர் இருந்த பிளாட், கவர்னர் மாளிகைக்கு பின்னால் உள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றிருந்தார். திடீரென கவர்னர் மாளிகையில் ராக்கெட் வெடிகுண்டு விழுந்தது. இதில் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார்’’ என்றார்.

அவரது செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது, இந்த செல்போன் உரிமையாளர் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார் என தகவல் பெறப்பட்டதாக பூஜா பிரஹாராஜ் தெரிவித்தார்.

ஆனால், நவீன் நண்பர் ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ‘‘உக்ரைன் நேரத்திற்கு காலை 10.30 மணிக்கு நவீன் கொல்லப்பட்டார். மளிகை கடையில் நீண்ட வரிசையில் நின்றிருந்தார். ரஷிய வீரர்கள் அப்போது பொதுமக்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவரது உடல் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

மேலும் செய்திகள்