இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்..!!

இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியர்களை அதிக அளவில் விரைந்து அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2022-03-01 06:56 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை.  

ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன.  இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

உக்ரைன் எல்லையையொட்டி 20 மைல்கள் வடக்கே, தெற்கு பெலாரஸ் பகுதியில் கூடுதல் தரை படைகளும், தரைகளை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர் படை பிரிவுகளும் குவிக்கப்பட்டு உள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.  இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, உக்ரைன் நிலைமை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமை தாங்கினார், இதன் போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஒருங்கிணைக்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் சிறப்பு தூதர்களாக செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்த சூழலில், டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, மாணவர்கள் மீட்பு பணி குறித்து பிரதமர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை இணைய உள்ளது. ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி ஆப்ரேஷன் கங்கா நடவடிக்கையின் கீழ் இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை அதிகரிக்க, இந்திய விமானப்படைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எங்கள் விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவது, குறுகிய காலத்தில் அதிகமான மக்களை வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும் செய்திகள்