கோடை காலம் தொடங்க இருப்பதால் கர்நாடகத்தில் மின்வெட்டு அமலுக்கு வரும்?
கர்நாடகத்தில் கோடை காலம் தொடங்குவதால் மின்வெட்டு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தின் அன்றாட மின் தேவை 7,193 மெகவாட்டாக உள்ளது. ஆனால் தற்போது அனைத்து ஆதாரங்கள் மூலம் மொத்தம் 4,136 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. கர்நாடகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 2,200 மெகாவாட் மின்சாரம் வருகிறது. இவற்றை எல்லாம் கணக்கிட்டு பார்த்தால் கர்நாடகத்திற்கு சுமார் 800 முதல் 900 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராய்ச்சூர் அனல் மின் நிலையத்தில் மொத்தம் 8 மின் உற்பத்தி அலகுகள் உள்ளன. அதன் மொத்த மின் உற்பத்தி திறன் 1,720 மெகவாட். அதில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 அலகுகளில் தான் மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதன் மூலம் 630 மெகாவாட் தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
பெங்களூருவுக்கு தினமும் 103 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 70 மெகாவாட் தான் வினியோகம் செய்யப்படுவதாக மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கோடை காலம் தொடங்க உள்ளதால், அடுத்து வரும் நாட்களில் மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அணைகளில் நீர்மட்டம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. கர்நாடகத்தில் நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 1,700 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால் தற்போது 300 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
நீர் மின் உற்பத்தி செய்யப்படும், ஷராவதி, வராகி, சூபா அணைகளில் 37 சதவீத நீர் மட்டுமே உள்ளது. அதனால் வரும் நாட்களில் இந்த மின் உற்பத்தி அளவு மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறான நிலை ஏற்பட்டால், அடுத்து வரும் நாட்களில் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மாநிலத்தில் பி.யூ.சி. மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிவடைந்த பிறகு மின்வெட்டு அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.