மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,653 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு மதிய நிலவரப்படி 1,653 புள்ளிகள் உயர்வடைந்து உள்ளது.;
மும்பை,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை முன்னிட்டு கச்சா எண்ணெய் விலை அதிரடியாக ஒரே நாளில் நேற்று பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் அளவில் அதிகரித்தது.
இதேபோன்று, இந்தியாவில் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் நேற்று கடுமையான சரிவை சந்தித்தன. இதன்படி, சென்செக்ஸ் 2,702 மற்றும் நிப்டி 815 புள்ளிகள் சரிந்திருந்தன. தங்கம் விலையும் அதிகரித்தது. இந்த நிலையில், பங்கு சந்தைகள் இன்று ஏற்றம் அடைந்துள்ளன.
இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு ஆயிரம் புள்ளிகள் உயர்வடைந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 16,500 புள்ளிகளுக்கும் கூடுதலாக ஏற்றமடைந்து உள்ளது.
இதன்படி, டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, டாடா ஸ்டீல், யூ.பி.எல். மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்டவை நிப்டி குறியீட்டில் லாப நோக்குடன் ஏற்றமடைந்து காணப்படுகின்றன.
சென்செக்ஸ் குறியீடு நேற்று 2,700 புள்ளிகள் சரிந்திருந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 55,321.72 புள்ளிகளாக லாப நோக்குடன் உயர்ந்து காணப்பட்டது. இதன்பின்னர் 56,183.70 புள்ளிகளாக உயர்ந்தது.
இது நேற்று முடிவடைந்த 54,529.91 புள்ளிகள் என்ற அளவீட்டுடன் ஒப்பிடும்போது, 1,653.79 புள்ளிகள் உயர்வு ஆகும்.
நிப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 413.20 புள்ளிகள் அல்லது 2.54 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து இன்று மதியம் 1.12 மணியளவில் லாபநோக்குடன் 16,661.15 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது.