தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு; முன்னாள் செயலாக்க அதிகாரி கைது
தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் நேற்றிரவு சென்னையில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.;
புதுடெல்லி,
தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த வாரம் (17ந்தேதி) சோதனை நடத்தினர். இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.
தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள், ஈவுத்தொகை காட்சிகள் மற்றும் நிதி முடிவுகள் உள்ளிட்ட சில உள் ரகசிய தகவல்களை தன்னை வழி நடத்தும் இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன், சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும், பரிமாற்றத்தின் ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த 18ந்தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.
லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மூவரில் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக எல்.ஓ.சி. பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இமயமலை யோகி, சித்ரா ராமகிருஷ்ணன் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் மேலாண் இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம் உள்ள இடம் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இவரை, சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றிரவு சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கூடுதலாக இருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன்படி, ஆனந்திடம் தொடர்ந்து அவரிடம் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.