உக்ரைனில் சிக்கி தவிக்கும்18 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர மாற்று ஏற்பாடு - மத்திய மந்திரி தகவல்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர மாற்று ஏற்பாடு வகுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி முரளீதரன் கூறினார்.

Update: 2022-02-25 00:31 GMT
திருச்சூர்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை நாடு திரும்புமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. சிறப்பு விமானங்களையும் ஏற்பாடு செய்தது.

அதன்மூலம் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பி விட்டனர். இருப்பினும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், டெல்லிக்கு திரும்பி வந்து விட்டது.

இந்தியர்களை உரிய நேரத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது. கேரள மக்கள் பத்திரமாக திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன், திருச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உக்ரைனில் இன்னும் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும். அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

இந்தியர்கள் பீதி அடைய வேண்டாம். மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர மாற்று திட்டம் வகுத்து வருகிறோம். மாற்று ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த திட்டம் குறித்த விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்