பண மோசடி வழக்கு; தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காசிரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காசிர் பிப்ரவரி 24ந்தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
புதுடெல்லி,
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காசிர் பிப்ரவரி 24ந்தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த பண மோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்த சிறப்பு குழு ஒன்றை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அமைத்துள்ளதாக தேசிய விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தாவூத் இப்ராஹிம் இந்த சிறப்பு குழு மூலம் நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பி வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏவிற்கு கிடைத்த தகவலின் படி, டெல்லி மற்றும் மும்பையில் வசிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை இந்த குழு குறிவைத்துள்ளது. இந்த குழு இந்தியா முழுவதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ முழுமையான விசாரணை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்அளித்துள்ளது. இதனையடுத்து தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள், அவர்களுடைய டி-கம்பெனி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, தேசிய விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காசிரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக, தாவூத் இப்ராஹிமின் உறவுக்காரரான அலிஷா பார்கர் கடந்த திங்கட்கிழமையன்று விசாரணை செய்யப்பட்டார். அவர்களுடைய சதி கும்பல் மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் எங்கெல்லாம் செயல்பட்டு வருகின்றன என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தானே நகர கோர்ர்ட்டில் இக்பால் காசிர் மீதான வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் மீதான விசாரணை மும்பை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டார்.
அவர் 2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். அவர் தனது சகோதரர் தாவூத் இப்ராஹிமிற்காக மும்பை மற்றும் பிற பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பான சதி வேலைகளில் ஈடுபட்டு வந்தவர்.
இன்றுடன் அவரது காவல் முடிவடைந்ததையடுத்து, அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.