ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதி குறித்து அவதூறு கருத்து; பிரபல நடிகர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!!
நடிகர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவருடைய ரசிகர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு.;
பெங்களூரு,
கன்னட நடிகர் சேத்தன் குமார். சமூக ஆர்வலரான இவர் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு வழக்கில் ராகேஷ் என்பவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா தீக்சித் ஜாமீன் வழங்கி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்தன் குமார் ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அந்த டுவிட்டை மறுபதிவு செய்த சேத்தன் குமார், ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் கூறியது பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்டு இருந்தார். நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சேத்தன்குமாருக்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது.
சேத்தன்குமார் கைது
இந்த நிலையில் நேற்று மதியம் நடிகர் சேத்தன்குமாரின் மனைவி மேகா, பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு சேத்தன்குமாரின் முகநூல் பக்கத்தில் இருந்து ஒரு வீடியோ பேசி வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில், “ நான் வெளியே சென்று இருந்த போது போலீசார் எனது வீட்டிற்கு வந்து சேத்தன்குமாரையும், அவரது பாதுகாவலரையும் அழைத்து சென்று உள்ளனர். நான் சேத்தன்குமாரின் செல்போன் எண்ணுக்கு அழைத்த போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தகவல் வருகிறது.
நான் சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து கேட்ட போது சேத்தன்குமாரை அழைத்து வரவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். அவர் கடத்தப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்” என்று கூறி இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த சேத்தன்குமாரின் ரசிகர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதால் சேஷாத்திரிபுரம் போலீசார் தாமாக முன்வந்து சேத்தன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் விளக்கம் அளித்துள்ளார்.