சிறுமியிடம் ஈவ் டீசிங் : இரண்டு இளைஞர்கள் அடித்து கொலை!
கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் ஒரு சிறுமியிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சிவமொக்கா சுலேபைலு பகுதியில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சிறுமியை ஈவ் டீசிங் செய்ததாகக் கூறப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சலீம் (22) மற்றும் அப்துல்லா (22) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் துங்கா நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுலேபைலுவில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம் இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்த்த சிறுமியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், இருவரையும் துரத்திச் சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்த கொலைக் குற்றச்சாட்டில் முகமது தாதாபீர், அல்லா பக்ஷ் மற்றும் பலரை கைது செய்ததாக துங்கா நகர் போலீசார் தெரிவித்தனர்.