பஞ்சாப் தேர்தல் ருசிகரம், உடல் ஒன்று ஓட்டு இரண்டு!

ஒட்டிப்பிறந்த இரட்டையார்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா இருவரும் தனித்தனியாக வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.;

Update: 2022-02-20 05:55 GMT
சண்டிகர்,

காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து களத்தில் உள்ளன. 93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2.14 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், கொரோனா நோயாளிகளுக்கும் தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு பஞ்சாப் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை நடைபெற உள்ள தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாக்களித்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில அரசு மக்கள் தொடர்பு அதிகாரி கவுரவ்குமார் கூறுகையில், “பஞ்சாப் அமிர்தரஸ் மணவாலாவில் உள்ள வாக்குச் சாவடி எண்.101ல் ஒட்டிப்பிறந்த இரட்டையார்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பட்டியலின் கீழ் வாக்களித்த இவர்களது வாக்குப்பதிவை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவர்கள் இணைந்திருந்தாலும் இரண்டு தனி வாக்காளர்கள் கருதப்படுவர். அவர்களின் வாக்குகள் ரகசியம் காக்கப்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன”. என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்