மராத்தா சமூகத்தினர் பயன்பெறும் வகையில் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும்: அஜித்பவார்

மராத்தா சமூகத்தினர் பயன்பெறும் வகையில் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேசினார்.

Update: 2022-02-19 20:35 GMT
சிவாஜி ஜெயந்தி

சத்ரபதி சிவாஜி மன்னரின் ஜெயந்தி விழா நேற்று மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகாவில் சிவ்னேரி கோட்டை உள்ளது. இங்கு தான் 1630-ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி பிறந்தார். எனவே அங்கு வெகுவிமரிசையாக நடந்த கொண்டாட்டத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் நாம் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். அதற்காக மாநில அரசு கமிஷன் ஒன்றையும் அமைத்து இருந்தது. மும்பை ஐகோர்ட்டு அதற்கு சாதகமான முடிவை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது.

மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தேவை இருப்பதால், பிற மாநிலங்களிலும் மற்ற சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்கின்றனர்.

இடஒதுக்கீடு உச்சவரம்பு

மராத்தா சமூகத்தினருக்கு கண்டிப்பாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். எனினும் இது மற்ற சமூகத்தினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடை பாதிக்காமல் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதமாக இருப்பதை நீக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டத்திருத்தங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல அவர், ஜூன்னார் மண்டலத்தில் விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட திட்ட கமிட்டி ரூ.27 லட்சத்தை ஒதுக்கி இருப்பதாகவும் கூறினார். சத்ரபதி சிவாஜி ஜெயந்தியையொட் சிவ்னேரி கோட்டையில் நடந்த விழாவில் மந்திரிகள் ஆதித்ய தாக்கரே, திலீப் வால்சே பாட்டீல், பாலாசாகிப் தோரட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்