உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 80 சதவீத மக்கள் ஆதரவுடன் பா.ஜ.க. வெற்றி பெறும்: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 80 சதவீத மக்கள் ஆதரவுடன் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.;

Update: 2022-02-19 19:23 GMT
லக்னோ, 

80 சதவீத ஆதரவு

உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்ட தேர்தல் நடந்து வரும் தருணத்தில், அந்த மாநில முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனம் ஒன்று அளித்த சிறப்பு பேட்டியின்போது கூறியதாவது:-

நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் பா.ஜ.க சாதனை படைக்க மக்கள் வழிவகுத்து விட்டனர். அடுத்த 5 கட்ட தேர்தல்கள், எதிர்க்கட்சிகளின் தலைவிதிக்கு முத்திரை குத்தும். பா.ஜ.க. 80 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளுக்கு 20 சதவீத ஆதரவு மட்டுமே கிடைக்கும்.

தேசியம், வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவை இந்த தேர்தலில் வாக்காளர்களின் முக்கிய பார்வையாக இருக்கிறது.

உ.பி.யில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. இதுபோன்ற நாடகங்களை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.

இரட்டை என்ஜின் ஆட்சி

2014-ல் இருந்து நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் அரசியல் செயல் திட்டம் ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கிறது. தற்போது வளர்ச்சி, நல்லாட்சி, சட்டம் ஒழுங்கு, வலுவான பொருளாதாரம் ஆகியவை மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் ஆட்சிதான் அதை சாத்தியமாக்கியது.

சாதி, சமூகம் மற்றும் கடந்த கால பணிகளை பேசுகிற கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர்.

5 ஆண்டுகளில் நாங்கள் செய்ததை சுதந்திரத்துக்கு பின்னர் வேறு எந்த அரசும் செய்யவில்லை. அகிலேஷ் யாதவ் அல்லது பகுஜன் சமாஜ் அல்லது காங்கிரஸ் கட்சிகள் ஏன் தங்களது கடந்த கால சாதனைகளை கூற வெட்கப்படுகின்றனர்?

சமாஜ்வாடி மீது தாக்கு

வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. இங்கு அது 3 சதவீதம்தான் என்று சி.ஐ.எம்.இ. தரவு கூறுகிறது. பா.ஜ.க. எந்த பாகுபாடும் இன்றி செயல்பட்டு வருகிறது. சமாஜ்வாடி கட்சி தனது சொந்த நலன்களில் அக்கறை கொண்டு, தங்களது ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் மாநிலத்தின் கண்ணியத்தை ஒப்படைத்தனர்.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய சமாஜ்வாடி அரசு தாஜா செய்யும் அரசியல், சாதி வெறி, ஊழல், பயங்கரவாதம், பயம் போன்ற அரசியலில் ஈடுபட்டது. குற்றவாளிகள் தெருக்களில் சுதந்திரமாக திரிந்தனர். சமாஜ்வாடி கட்சி மக்களை எப்போதும் தவறாக வழிநடத்துகிறது. மாநிலத்தை இழிவுபடுத்துகிறது.

கொரோனா காலத்தில் அந்த கட்சி தலைவர்களையும் தொண்டர்களையும் எங்கும் காணவில்லை. இந்த அலட்சித்துக்கு எதிராக மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள இரட்டை என்ஜின் அரசு பணத்தை, வளங்களை மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவும், சிகிச்சை அளிக்கவும், இரு மடங்கு ரேஷன் பொருட்கள் வழங்கவும் பயன்படுத்தின. இந்த தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர்கள் புகழ் மற்றும் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்