‘நடிகை ஹேமமாலினியின் கன்னம் போல சாலை’ மத்திய மந்திரியின் பேச்சால் சர்ச்சை
மத்தியபிரதேச மாநிலத்தின் டின்டோரி மாவட்ட சாலைகள், நடிகையும், மக்களவை எம்.பி.யுமான ஹேமமாலினியின் கன்னங்களைப் போல வழுவழு என இருக்கின்றன என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை ராஜாங்க மந்திரி பக்கன்சிங் குலாஸ்டே கூறினார்.
மத்தியபிரதேச மாநிலத்தின் டின்டோரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புற பகுதிக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை ராஜாங்க மந்திரி பக்கன்சிங் குலாஸ்டே சென்றார். அங்கு அவரிடம் கிராம மக்கள், குடிநீர் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர்.
அப்போது, ‘ஆனால் இப்பகுதி சாலைகள், நடிகையும், மக்களவை எம்.பி.யுமான ஹேமமாலினியின் கன்னங்களைப் போல வழுவழு என இருக்கின்றனவே?’ என்று மந்திரி குலாஸ்டே கூறினார்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
இப்படி ஒப்பிட்டதன் மூலம் மத்திய மந்திரி குலாஸ்டே, பெண்களின் கவுரவத்தை இழிவுபடுத்திவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கோரவும் வலியுறுத்தியுள்ளனர். அந்த வீடியோவை பகிர்ந்துள்ள மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை எம்.பியுமான திக்விஜய சிங், இதுபோன்று பேசக்கூடாது என்று மந்திரி குலாஸ்டேயை அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.