அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசார் சபையை முடக்குவது சரியல்ல: பசவராஜ் பொம்மை
அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசார் சபையை முடக்குவது சரியல்ல என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளாா்.;
அவை முடங்கியது
ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து கூறிய மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் காவி கொடியை ஏற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்து இருந்தார். இது சர்ச்சையானது. இதனால் மந்திரி ஈசுவரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராடி வருகிறார்கள். சட்டசபையிலும் காங்கிரஸ் கட்சியினர் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 3-வது நாளான நேற்றும் கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் அவை முடங்கியது.
அரசியல் ஆதாயத்திற்காக தர்ணா
சபையை முடக்கி வரும் காங்கிரசாருக்கு கண்டனம் தெரிவித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதை நான் கடந்த காலங்களில் பார்த்துள்ளேன். ஆனால் மந்திரி ஈசுவரப்பா ஏதோ கூறிவிட்டார் என்று அதை வைத்து போராடுவது சரியல்ல. அவர் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் தவறான நோக்கத்தில் தேசிய கொடி குறித்து கூறவில்லை. காங்கிரசார் விவசாயிகள், கூலித்தொழிலாளர் பிரச்சினைகளுக்காக போராடவில்லை.
இதில் மாநிலத்தின் நலன் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக தர்ணா நடத்துகிறார்கள். சபையை முடக்குவது சரியல்ல. எதிர்க்கட்சி தனது பொறுப்பை மறந்துவிட்டது. மக்களின் பிரச்சினைகளை எழுப்பி அதற்கு தீர்வு காண வேண்டிய எதிர்க்கட்சி இவ்வாறு தர்ணா நடத்துவது, அவர்களின் அரசியல் திவாலை காட்டுவதாக உள்ளது.
மக்களுக்கு துரோகம்
உறுப்பினர்களின் உரிமைகளை முடக்கும் வேலையை காங்கிரஸ் செய்கிறது. கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் போராட்டம் நடக்கிறது. ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. அதை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக படிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய நேரத்தில் காங்கிரஸ் இவ்வாறு செயல்படுவது என்பது, மாணவர்களின் நலனுக்கு எதிரானது. பள்ளி-கல்லூரிகளில் அனைத்து குழந்தைகளும் நமது குழந்தைகள்.
பள்ளி-கல்லூரிகளில் தினமும் குழப்பம் ஏற்படுகிறது. இத்தகைய குழப்பங்களுக்கு இங்கு தான் தீர்வு காண வேண்டும். நாம் ஒற்றுமையாக விவாதித்து இங்கிருந்து மாநில மக்களுக்கு ஒரு நல்ல சமிக்ஞையை அனுப்ப வேண்டும். ஆனால் பிரச்சினைகளை திசை திருப்பி போராட்டம் நடத்துவது சரியல்ல. மக்கள் கேள்வி கேட்கிறார்கள். காங்கிரசார் அரசியல் சாசனம், சட்டசபைக்கு துரோகம் செய்துவிட்டனர். மாநில குழந்தைகள், மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.
மலிவான அரசியல்
அதனால், மக்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, பிரச்சினைகளை தீர்க்க காங்கிரஸ் முன்வர வேண்டும். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்காவிட்டால் வரும் நாட்களில் காங்கிரசை மக்கள் நிராகரிப்பார்கள். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசை மக்கள் நிராகரித்துள்ளனர்.
இதே நிலையை அவர்கள் பின்பற்றினால் கர்நாடகத்திலும் காங்கிரசை மக்கள் நிராகரிப்பார்கள். ஈசுவரப்பா தவறாக எதுவும் சொல்லவில்லை. சொல்லாத விஷயத்தை கூறியதாக சொல்லி காங்கிரசார் மலிவான அரசியல் செய்கிறார்கள். ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா உறுப்பினர்களின் உரிமைகளை காக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.