கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-18 21:23 GMT
‘ஹிஜாப்’ ேபாராட்டம்

கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ விவகாரம் கடந்த 7-ந்தேதி முதல் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய இடைக்கால உத்தரவில் மத அடையாள ஆடைகளை மாணவர்கள் அணியக்கூடாது என்று கூறி தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகளில் வன்முறை வெடித்தது.

பதற்றத்தை தணிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் சற்று பதற்றம் குறைந்தது. இதையடுத்து கடந்த 14-ந் தேதி உயர் நிலைப்பள்ளிகளும், 16-ந் தேதி பி.யூ. கல்லூரிகளும் திறக்கப்பட்டது. அப்போது முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் நுழைந்தனர். ஆனால் பள்ளி, கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

மீண்டும் ஹிஜாப்-காவி துண்டு

இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரி நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினர். இருப்பினும் முஸ்லிம் மாணவிகள் எங்கள் உரிமையை மீ்ட்டெடுப்பதே எங்களுடைய கடமை என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 3-வது நாளாக நேற்று முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராடியதால், போட்டிக்கு இந்து மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் காவி துண்டுடன் வலம் வந்தனர்.

குறிப்பாக பெலகாவி அதானியில் உள்ள பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராடியதால், இந்து மாணவர்கள் காவி துண்டுடன் வளாகத்திற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஐகோர்ட்டு உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

பொறுமையாக இருக்கும்படி...

இதையடுத்து அவர்கள் காவி துண்டை கழற்றினர். இதேபோன்று பெலகாவி நந்தகடாவில் உள்ள மகாத்மா காந்தி அரசு பி.யூ கல்லூரி மற்றும் பெலகாவி மருத்துவகல்லூரியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தபடி வகுப்பறைக்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது மகளிர் போலீசார் மாணவிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து, முஸ்லிம் மாணவிகளை தனியாக அழைத்து சென்று ஐகோர்ட்டு இறுதி தீர்ப்பு வரும் வரை பொறுமையாக இருக்கும்படி கூறினர். இதை ஏற்ற மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காவி துண்டுடன் வந்த மாணவர்கள்

இதை தொடர்ந்து சிக்கோடியில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் சில மாணவர்கள் ஹிஜாப்பிற்கு எதிராக காவி துண்டுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர். அவர்களை கல்லூரி பேராசிரியர்கள், போலீசார் பிடிக்க சென்றதும், சிதறி ஓடி பதுங்கி கொண்டனர். சிலர் கல்லூரியின் மொட்டை மாடியில் ஏறி நின்று காவி துண்டுடன் வலம் வந்தனர். இதனால் அந்த கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று சித்ரதுகாவில் அரசு பி.யூ மற்றும் எஸ்.ஆர்.எஸ் கல்லூரி நுழைவாயில் முன்பு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராடினர். அப்போது அங்கு சென்ற போலீசார் கல்லூரியை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி நடந்தாலோ அல்லது ஐகோர்ட்டு உத்தரவை மீறி செயல்பட்டாலோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். முன்னதாக மாணவர்களுக்கும், பெண் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

போலீஸ் எச்சரிக்கை

பெலகாவி, துமகூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மத அடையாள ஆடைகளை அணிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெலகாவி மாவட்ட கலெக்டர் ஹிரேமட் இதுதொடர்பாக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுபோல் குடகு மாவட்டம் மடிகேரி அரசு பி.யூ.சி. மற்றும் பட்டதாரி கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து மாணவிகள் வந்தனர். அவர்களை முதல்வர் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர், போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மாணவிகள் அங்கிருந்து வீடு திரும்பினர்.

மாநிலம் முழுவதும் ஐகோர்ட்டு உத்தரவை மீறி மாணவ-மாணவிகள் மத அடையாள ஆடைகளை அணிந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வகுப்பு புறக்கணிப்பு

இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோன்று துமகூரு, விஜயாப்புரா, யாதகிரி, கொப்பல், ஹாசன், குடகு, சிக்கமகளூரு உள்பட சில மாவடங்களில் முஸ்லிம் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக நீடித்த மாணவர்களின் போராட்டம் நேற்று ஓரளவுக்கு குறைந்திருந்தது. மாணவர்களின் போராட்டம் பிசுபிசுத்ததால் இயல்புநிலை திரும்பி வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்