கோதாவரி-காவிரி நதிகள் இணைப்புக்கான தொடக்க பேச்சுவார்த்தை; தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்புக்கான தொடக்க பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நதிகள் இணைப்பு
இந்தியாவில் நதிகள் இணைப்பு திட்டம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிந்திய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
கோதாவரி நதி ஆயிரத்து 450 கி.மீ. நீளம் கொண்டது. இது மராட்டிய மாநிலத்தில் உற்பத்தியாகி, தெலுங்கானா, ஆந்திரா வழியாக பாய்ந்து ஆந்திராவில் ராஜமுந்திரி என்ற இடத்தில் வடக்கு, தெற்காக பிரிந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில் தெற்கில் பிரியும் கோதாவரிக்கு வசிஷ்ட கோதாவரி என்று பெயர். இது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் கடலில் கலக்கிறது.
கிருஷ்ணா நதியும் மராட்டிய மாநிலத்திலேயே உற்பத்தி ஆகிறது. ஆயிரத்து 300 கி.மீ. நீளம் கொண்ட இதுவும் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக ஹேமசலதேவி என்ற பகுதியில் கடலில் கலக்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய நதியான காவிரி, கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் உற்பத்தியாகி, 805 கி.மீ. தூரம் ஓடி, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
விரிவான திட்ட அறிக்கை
கோதாவரி-கிருஷ்ணாவுடன் காவிரி, பின்னர் வைகை நதிகளை இணைக்கவும், அத்துடன் பெண்ணையாறு, குண்டாறு உள்ளிட்ட கிளை நதிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனாலும் திட்டத்துக்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படும்போது உரிய நிதி ஒதுக்கப்படும் என சமீபத்திய மத்திய பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே கோதாவரி-காவிரி நதிகளை இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் 2 முறை காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய ஜலசக்தி துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜலசக்தி துறை செயலாளர் பங்கஜ்குமார் தலைமை தாங்கினார்.
இதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழக அரசின் சார்பில்நீர்வளத்துறை கூடுதல்தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
தெலுங்கானா எதிர்ப்பு
கூட்டத்தில் அந்தந்த மாநில அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இது தொடக்க பணிகளுக்கான பேச்சுவார்த்தை என்பதால் கூட்ட நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. அடுத்த கூட்டம் பற்றியும் அறிவிக்கவில்லை.
இருப்பினும், நதிகள் இணைப்பு திட்டத்துக்கு தெலுங்கானா மாநிலம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், காவிரி-தென்பெண்ணை ஆறுகள் இணைப்பில் உடன்பாடு இல்லை என கூறியதாகவும், மேகதாது அணை விவகாரத்தை இதில் உட்படுத்தக்கூடாது என வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.