எதிர்க்கட்சி தலைவர்கள் ஓட்டு கேட்க வரும்போது ராமர் கோவிலுக்கு முட்டுக்கட்டை போட்டது ஏன் என்று கேளுங்கள்: ஜே.பி.நட்டா

எதிர்க்கட்சி தலைவர்கள் ஓட்டு கேட்க வரும்போது, ராமர் கோவிலுக்கு முட்டுக்கட்டை போட்டது ஏன் என்று வாக்காளர்கள் கேட்க வேண்டும் என்று ஜே.பி.நட்டா கூறினார்.

Update: 2022-02-18 17:12 GMT
நூற்றாண்டு கனவு

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா அயோத்தியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டுவது நூற்றாண்டு கால கனவு. அது பா.ஜனதாவின் கலாசார இலக்கு. எந்த வன்முறையும் இன்றி கோவில் கட்டப்பட்டு வருகிறது.

ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் ராமர் கோவில் கட்டுவதற்கு எத்தனையோ முட்டுக்கட்டை போட்டனர். அவர்கள் ஓட்டு கேட்க வரும்போது, முட்டுக்கட்டை போட்டது ஏன் என்று கேளுங்கள்.

பிரியங்கா கைதட்டல்

அயோத்தியில், மருத்துவ கல்லூரி, சர்வதேச விமான நிலையம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசத்தின் பொருளாதாரம், நாட்டிலேயே 2-வது இடத்தை அடைந்துள்ளது.

உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் தொழிலாளர்களை பஞ்சாப் முதல்-மந்திரி ேகலி செய்தபோது, பிரியங்கா கைதட்டி ரசித்தார். ராகுல்காந்தியும், பிரியங்காவும் எழுதிக்கொடுத்ததை வாசிப்பவர்களே தவிர, தலைவர்கள் அல்ல.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆடிப்போய் உள்ளார். அதனால்தான் தன் தந்தையை பிரசாரத்துக்கு அழைத்து வந்துள்ளார். 370-வது பிரிவை நீக்குவது எங்கள் கனவு. அதை நீக்கி உள்ளோம்.

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு

‘ஜன்தன்’ கணக்குகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேலி செய்தன. ஆனால், ஊரடங்கில் அதுதான் கை கொடுத்தது. ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.500 செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டன.

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு பிரதமர் மோடியை விட வேறு யாரும் பெரிய அளவில் செய்யவில்லை. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறார். ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின்சார சப்ளை அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்