வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி வங்கிக்கணக்கில் இருந்து ரூ.82 லட்சம் மோசடி!

இந்த ஏமாற்று கும்பல், இதைப்போல பலரை ஏமாற்றி ரூ.82 லட்சம் வரையிலான தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து அபகரித்துள்ளனர்.;

Update: 2022-02-17 14:58 GMT
புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு ஏமாற்று பேர் வழிகள் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி பல பேருடைய வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.82 லட்சம் தொகையை நூதன முறையில் திருடியுள்ளனர். 
 
இது தொடர்பாக கடந்த ஜனவரி 7ந்தேதியன்று பாதிக்கப்பட்ட ஒரு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்  ‘மேக் மை டிரிப் தளத்தில் தனது பணத்தை திரும்பப் பெறுவதற்காக வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்ணை பாதிக்கப்பட்ட நபர் ஆன்லைனில் தேடியுள்ளார்.

அப்போது இந்த போலி ஏமாற்று கும்பலை சேர்ந்தவர் தன்னுடைய நம்பரை வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண் என்று பதிவேற்றியுள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்திடாத பாதிக்கப்பட்ட நபர், அந்த வாடிக்கையாளர் சேவை மைய நம்பரை தொடர்பு கொண்டு பேசி, அவருடைய அறிவுறுத்தலின்படி ஒரு படிவத்தை ஆன்லைனில் நிரப்பி கொடுத்துள்ளார்.

பின் அவர் கூறியபடி,  ‘எனி டெஸ்க் மொபைல் ஆப்பை’ பதிவிறக்கம் செய்துள்ளார். அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஐயும் திறந்து படித்துள்ளார். அதிலுள்ள லிங்க்கை கிளிக் செய்துள்ளார்.

அதன்பிறகு, பாதிக்கப்பட்ட நபருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபகரிக்கப்பட்டுள்ளது.இதனை பாதிக்கப்பட்ட நபர்  போலீசில் தான் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அபிலேஷ்குமார்(22) மற்றும் அவரது கூட்டாளியான ராஜு அன்சாரி(22) ஆகியோரை ஜார்க்கண்ட்டில் கைது செய்தனர். 

போலீசார் விசாரணையில், இந்த ஏமாற்று கும்பல், இதைப்போல பலரை ஏமாற்றி ரூ.82 லட்சம் வரையிலான தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து அபகரித்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்