டெல்லியில் இருந்து புறப்பட்ட டாடா குழும விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு - அவசரமாக தரையிறக்கம்
டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டாடா குழுமத்தின் விஸ்தாரா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.;
புதுடெல்லி,
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கிச் சென்ற இன்று டாடா குழுமத்திற்கு சொந்தமான விஸ்தாரா யுகே- 697 விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் 146 பயணிகள் பயணித்தனர். டெல்லியில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனை கவனித்த விமானி விமானத்தை மீண்டும் உடனடியாக டெல்லிக்கே திருப்பினார். விமானம் டெல்லி விமான நிலையத்தில் காலை 10.15 மணியளவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் பின்னர், அதில் இருந்த பயணிகள் அனைவரும் (146 பேர்) பாதுகாப்பாக வெளியேறினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் டெல்லி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அவசரமாக தரையிறக்கம் குறித்த தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வாகனங்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு விரைந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக்கோளாறால் தரையிறங்கப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பஞ்சாப் பயணம் மேற்கொண்டனர்.