தாதா தாவூத் இப்ராகிமுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மும்பையில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.;

Update: 2022-02-15 19:24 GMT
அமலாக்கத்துறை வழக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஆவார். பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் தாவூத் இப்ராகிம் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை ஹவாலா மூலமாக பயங்கரவாதத்தை பரப்ப பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் தேசவிரோத செயல்கள், இருசமூகத்தினர் இடையே மோதலை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

தாவூத் இப்ராகிம் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதாக அவர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்து உள்ளது. இந்த விவகாரங்களில் சில அரசியல் தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மும்பையில் 10 இடங்களில் சோதனை

இந்தநிலையில் நேற்று அமலாக்கத்துறை மும்பையில் 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இவை தாவூத் இப்ராகிம், அவரது கூட்டாளிகள் தொடர்புடைய இடங்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள நாக்பாடா பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல அமலாக்கத்துறையினர் தாதா சோட்டா சகீலின் மைத்துனர் சலீம் புருட்டையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகள் 2 பேரிடம் இருந்து தேசியவாத காங்கிரசை சேர்ந்த மராட்டிய மந்திரி நவாப் மாலிக் குர்லா பகுதியில் 2.8 ஏக்கர் சொத்துகளை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கியதாக சமீபத்தில் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி இருந்தார். எனவே அந்த விவகாரம் குறித்தும் அமலாக்கத்துறை இந்த வழக்கின் கீழ் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது.

பரபரப்பு

இன்னும் சில நாட்களில் சிறை செல்ல இருக்கும் பா.ஜனதாவினர் விவரங்களை வெளியிடுவேன் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் கூறியிருந்த நிலையில் மும்பையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது.

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவசேனா கருத்து

ஆனால் இது குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், " தேசிய பாதுகாப்பு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினால், அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்து தான் ஆக வேண்டும். இதுதொடர்பான விஷயங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது அவசியம். தேசிய பாதுகாப்பு மிகவும் நுட்பமானது. எனவே இந்த விசாரணை குறித்து பேசுவது சரியாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அது வரவேற்கப்படும். அது நாட்டுக்கானது. எந்த கட்சிக்குமானது அல்ல " என்றார்.

இதற்கிடையே சேனா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மராட்டிய அரசை கவிழ்க்கும் நோக்கில் மத்திய விசாரணை முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களுக்கு பணிந்து போக மாட்டோம்” என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்