உ.பி. தேர்தல்; இலவச ரேசன், 1 கிலோ நெய்: அகிலேஷ் யாதவ் பிரசாரம்
உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தால் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன், 1 கிலோ நெய் வழங்குவோம் என அகிலேஷ் யாதவ் பிரசாரத்தில் கூறியுள்ளார்.;
ரேபரேலி,
உத்தர பிரதேசத்தில் சட்டசபைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உ.பி. முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் ரேபரேலியில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் இன்று கலந்து கொண்டு பேசினார்.
அவர் பிரசாரத்தில் பேசும்போது, ரேசன் பொருட்களை பெறும் ஏழைகள் தேர்தல் வரை அதனை பெறுவார்கள். தேர்தலுக்கு பின்பு அவர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்காது. இதற்கு முன், நவம்பர் வரை வழங்கப்பட இருந்தது. ஆனால், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் மார்ச் வரை ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார்கள்.
சமாஜ்வாடியும் ரேசன் பொருட்களை முன்பு வழங்கியது. நாங்கள் ஆட்சியை பிடித்தால் 5 ஆண்டுகளுக்கு ரேசன் பொருட்களை வழங்குவோம். கூடவே, கடுகு எண்ணெய் மற்றும் ஓராண்டில் 2 சிலிண்டர்கள் வழங்கப்படும்.
எங்களுடைய ஏழை மக்களின் ஆரோக்கியம் மேம்பட, ஒரு கிலோ நெய்யும் வழங்கப்படும் என கூறியுள்ளார். பா.ஜ.க. அரசில், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் மரணம் அதிகரித்து உள்ளது. இரட்டை இயந்திர அரசில் ஊழலும் இரட்டித்துள்ளது என அவர் குற்றச்சாட்டும் தெரிவித்து உள்ளார்.