புல்வாமா தாக்குதல் 3-ம் ஆண்டு நினைவு நாள்: உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்து, 3 ஆண்டுகள் ஆன நிலையில், அதில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில். இந்த சம்பவத்தி்ல் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. அந்த கொடூர தாக்குதல் நடந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பிரதமர் மோடி அஞ்சலி
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், இந்திய தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நினைவு கூர்கிறேன்.
அவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான இந்தியாவை நோக்கி உழைக்க தூண்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.
மலர்வளையம் வைத்து அஞ்சலி
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், டுவிட்டரில், “கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். இந்திய வீரர்களை நாம் நினைவு கூர்வோம். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஒட்டு மொத்த தேசமும் ஒற்றுமையாக நிற்கிறது'' என பதிவிட்டு உள்ளார்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு சி.ஆர்.பி.எப். ஏ.டி.ஜி.பி. சவுத்திரி தலைமையில் ராணுவ அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சவுத்திரி நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் இந்த நினைவிடத்திற்கு வந்து மறைந்த வீரர்களின் வீரமரணத்தை நினைவுகூர்கிறோம். அவர்களின் தியாகத்தை போற்றுவதோடு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
நினைவு சுவர்
புல்வாமா தாக்குதலில், உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இங்குள்ள லேத்போரா கிராமத்தில், நினைவு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து வைக்கப்பட்ட அந்த சுவரில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்களின் படங்கள், பெயர்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவை சேர்ந்த பாடகர் உமேஷ் கோபிநாத் ஜாதவ் என்பவர், உயிரிழந்த, 40 சி.ஆர்.பி.எப்., வீரர்களின் வீடுகளுக்கும் சென்று, அங்கிருந்து மண்ணை எடுத்து வந்துள்ளார். சுமார், 61 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்த அவர், 16 மாநிலங்களுக்குச் சென்று, உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் ஆசியை பெற்றார். விரைவில் கட்டப்படும் நினைவிடத்திற்கு, அந்த மண் பயன்படுத்தப்பட உள்ளது.