சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததற்கான ஆதாரம் உள்ளதா? - சந்திரசேகர் ராவ் கேள்வி

2019 ல் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு மத்திய அரசிடம் ஆதாரம் உள்ளதா என சந்திரசேகர் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-02-14 11:23 GMT
ஹைதராபாத்,

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரகாண்டில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி குறித்து விமர்சித்திருந்தார். அதில் அவர், " ராகுல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ராணுவத்திடம் ஆதாரம் கேட்கிறார், அவர் ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டதுண்டா? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ராணுவத்திடம் ஆதாரம் கேட்க? என கூறியிருந்தார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெற்றோர் குறித்த இந்த கருத்துக்கு அசாம் முதல்வர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும், இந்த தரக்குறைவாக கருத்து தெரிவித்ததற்காக அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வலியுறுத்தினார்.

இதுகுறித்து, சந்திரசேகர் ராவ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மற்றும் அவரது கட்சியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவர் ஒரு எம்.பி, மிகப்பெரிய குடும்ப வரலாற்றைக் கொண்டவர். அவரை பற்றிய கருத்துக்கு அசாம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.

மேலும் அவர், " 2019 செப்டம்பரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு மத்திய அரசிடம் ஆதாரம் உள்ளதா இருந்தால் காட்டட்டும், பாஜக பொய் பிரச்சாரம் செய்கிறது, பாஜக சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது. எல்லையில் இராணுவம் சண்டையிடுகிறது அதில் யாரேனும் இறந்தால்,அதற்கான பெருமை ராணுவ வீரர்களுக்கு தான் வழங்கப்பட வேண்டும், பாஜகவிற்கு அல்ல,'' என்று கூறினார்.

மேலும் செய்திகள்