கேரளா நம்பர் ஒன் எதில்...? அதிரடி பட்டியலிட்ட பா.ஜ.க.
கேரளாவில் குடி, குற்ற விகிதம் அதிகம் என பா.ஜ.க. துணை தலைவர் அதிரடி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எச்சரிக்கையுடன் இருங்கள் மக்களே. உங்கள் வாக்கு வாழ்க்கைக்கான உத்தரவாதம் அளிக்க கூடியது. இதனை தவற விட்டால் உத்தர பிரதேசம் ஆனது காஷ்மீர், கேரளாவை போல்மாறி விடும் என கூறினார்.
பீகாரை விட பின்னடைவு
அவரது பிரசார பேச்சுக்கு பா.ஜ.க. துணை தலைவர் ராதாகிருஷ்ணன் தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கேரள முதல்-மந்திரி பினராயி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இருவரும் கேரள மாடல், உலகம் முழுவதற்கும் எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.
ஆனால், இதற்கு நான் உடன்படவில்லை. கேரள உயர் கல்வியானது மொத்த கேரளாவுக்கும் மாடலாக உள்ளது என உணர்வுள்ள எந்த நபரும் கூறமாட்டார். பல வகைகளில் நாம் பீகாரை விட பின்தங்கி உள்ளோம் என கூறியுள்ளார்.
வரதட்சணை கொடுமை
அவர் தொடர்ந்து கூறும்போது, தனிநபர் மது குடிப்போரின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. வரதட்சணை என்ற பெயரில் பெண்களை கொடுமைப்படுத்துவதில் முதல் இடத்தில் உள்ளது. குற்ற விகிதங்களில் முதல் இடத்தில் உள்ளது. தொழிற்சாலைக்கு நமது பங்கு பூஜ்யம். வேளாண் உற்பத்தியில் நாம் இன்னும் மேம்படவில்லை. விவசாயத்தில் நம்முடைய பங்கு மெச்சத்தக்க வகையில் இல்லை. பணம் சார்ந்த பொருளாதாரம் என்ற அளவிலேயே நாம் இருக்கிறோம். இதனை கேரள மாடலாக நாம் எடுத்து கொள்ள முடியுமா...? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு காரணம் சி.பி.ஐ. (எம்) ஆட்சி என்றும் அவர்கள் வருவாய் உற்பத்தியாளர்களை பாவிகளாக உருவகம் செய்து வைத்துள்ளனர். அந்த எண்ணம் மாறவில்லை. மருத்துவ வசதி தேவைப்படும் மக்களுக்கு போதிய அளவிலான மருத்துவமனைகளும் நம்மிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.